ஆஞ்சனேய கோயிலிலே அன்னாடம் ஆஜராகி
அம்சமா நெத்தியில சேந்தூரம் பூசிகிட்டு
அடக்கமா நான் நடக்கையில அன்னாந்து பாத்துபுட்டு
"அச்சச்சோ!" சொல்லுவியே அதுகூட மறந்துடுச்சா..?
வாரசந்தைக்கு வழக்கமா நான் நடக்க
வம்புக்கண்டி தோழிகளோட வண்டிகட்டி நீ கடக்க
வட்ட நெலவான எம்மனசு தேஞ்சுபோக,
வண்ணக்கிளி உன் கண்ணக்காட்டி பௌர்ணமியா ஆக்கிபுட்டு
வெக்கபட்ட சித்திரமே இது கூட மறந்துடுச்சா..?
அடி கரம்பா கெடந்ததடி எம்மனசு.. எம்மனசு..
அத ஆழ உழுதவளும் நீதாண்டி.. நீதாண்டி..
காதல் வெதவெதச்சு கனவு உரமிட்டவளே
சாதல் இல்லாம வெரும் சவமா கிடக்கிறேன்டி
பருத்திக்கா வெடிச்சிருச்சா..!?
நம்ம சேதி வீட்டுக்கு தெரிஞ்சிருச்சா..!?
என் மாமன் ஏதும் சொன்னாரா?
ஆர அமர பேசிக்கலாம்
என் அத்த ஏதும் சொல்லிடுச்சா?
பல வித்தை உண்டு யோசிக்கலாம்
சந்தையில நானறிய - என்ன
சுத்தி சுத்தி வந்தவளே!
பசலக்கொடியே - இப்ப
பாக்காம போகறியே..
பரிசம் போட காத்திருக்கேன்
சத்தியமா சொல்லுறன் கேளு
சீதனமா உன் சிரிப்பு போதும்...
சீதனமா உன் சிரிப்பு போதும்...
- தா.பாரதிராஜன்
No comments:
Post a Comment